சரியாகத் தூங்காவிட்டால் வரும் தொல்லைகள்..!

Description:

நீங்கள் நன்றாகத் தூங்கும் நேரம், நீங்கள் தூங்கும் விதம், உங்களின் ஆழ்ந்த தூக்க நேரம், இவைகளை வைத்துதான் நீங்கள் விழித்திருக்கும் நேரம், உங்கள் ஞாபகசக்தி, மூளையின் செயல்பாடு, அறிவுத்திறன், சிந்தனை, உடலின் செயல்பாடு, எண்ணங்களின் வெளிப்பாடுகள், உடலின் சக்தி, உடலின் எடை ஆகியவை கணக்கிடப்படுகிறது.

நான்கு நாட்கள் சரியாகத் தூங்கவில்லையென்றால், அரை கிலோ உடல் எடை குறைந்து விட்டது என்று சிலர் சொல்வார்கள். இது முற்றிலும் உண்மை. தூங்கும் நேரத்தை வைத்துத்தான், விழித்திருக்கும் நேரம் கணக்கிடப்படுகிறது. நன்றாகத் தூங்கிவிட்டு எழுந்தால் அடுத்தநாள் தூங்குகிறவரை களைப்பில்லாமல் உற்சாகமாக எல்லா வேலைகளையும் பார்க்க முடியும்.

எல்லா வேலைகளிலும் அதிகமாக கவனம் செலுத்தவும் முடியும். வேறு எந்த விஷயத்திலும் இவ்வளவு உற்சாகமும், ஆனந்தமும், சந்தோஷமும், தெம்பும், நிம்மதியும் கிடைக்காது. ஒருநாளைக்கு சுமார் 8 மணி நேரம் நாம் தூங்குவதாக வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதியை நாம் தூங்கிக் கழிக்கிறோம். அப்படியென்றால் ஒருவேளை நாம் எழுபது வயதுவரை வாழ்கிறோம் என்று வைத்துக் கொண்டால் சுமார் 23 வருஷத்தை நாம் தூங்கியே கழித்திருக்கிறோம் என்று அர்த்தம்.

ஆ… 23 வருட வாழ்க்கையை நாம் தூங்கியே கழித்துவிட்டோம் என்று எண்ணி நீங்கள் வேதனைப்பட வேண்டாம். உண்மை என்னவென்றால், 23 வருடம் ஒழுங்காக தூங்கியதால்தான், 70 வயது வரை நிம்மதியாக வாழ முடிந்திருக்கிறது என்பதுதான் நிஜம். அப்படி தூங்கவில்லை என்றால் அந்த வயது வரை வாழவே முடியாது. ஒழுங்காக தூங்காவிட்டால் நம் மூளையும் வேலை பார்க்காது.

தினமும் சரியாகத் தூங்காதவருடைய உடல் எடை, வெகு சீக்கிரத்திலேயே குறைய ஆரம்பித்துவிடும். அதேபோல கண்களைச் சுற்றி கரு வளையமும், கண்கள் சற்று உள்ளேபோன மாதிரியும் தெரியும். உடலில் சோர்வு அதிகம் இருக்கும். தெம்பு இருக்காது. உடல் தசைகள் முழுவதிலும் வலி இருக்கும். ஞாபக மறதி இருக்கும்.

மனச் சோர்வு, கை விரல் நடுக்கம், தலைவலி, ஜலதோஷம் வருவது போன்ற உணர்வு, கண்கள் சிவந்து போகுதல், கண் கீழ் இமைக்குக் கீழே பை போல வீங்கிப் போகுதல் (ஐ பேக்ஸ்) ரத்தக்கொதிப்பு அதிகரித்தல், உடலில் ஹார்மோன்கள் அதிகமாக சுரத்தல், சர்க்கரை வியாதி வருவதற்குண்டான வாய்ப்புகள், எரிச்சல், தலைசுற்றல், உடல் எடை சில பேருக்கு கூடுதல், கொட்டாவி முதலியவை ஏற்படும்.

தூக்கத்தை தொலைக்கும் வியாபாரிகளுக்கும், இரவுப் பணி செய்பவர் களுக்கும் மேற்கண்ட பிரச்சினைகளில் அவரவர் தூக்க அளவைப் பொறுத்து ஏதேனும் பாதிப்புகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். பத்து வயது வரை நிறைய நேரம் குழந்தைகள் தூங்க வேண்டும். இது அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஆனால் இப்பொழுதெல்லாம் குழந்தைகளை பெற்றோர்கள் சரி வர தூங்க வைப்பதே இல்லை. இரவும் லேட்டாக குழந்தைகள் படுக்கிறார்கள்.

காலையில் ஸ்கூலுக்கு அனுப்ப அரைகுறை தூக்கத்திலேயே சீக்கிரம் எழுப்பி ரெடி பண்ணி வேனில் ஏற்றி விட்டு விடுகிறார்கள். இது சரியல்ல. குழந்தை வளர வளர, தூக்க நேரம் ஒவ்வொரு மணி நேரமாக குறைந்து கொண்டே வரும். 50 வயது வரும்போது 6 முதல் 8 மணி நேர தூக்கமாக குறைந்து விடும். இளம் வயதில் அதிக நேரம் படிப்பதனாலும், வேலை பார்ப்பதனாலும், விளையாடுவதாலும், மூளை சீக்கிரமே களைப்படைந்து விடுகிறது.

ஆனால் இளம் வயதில் தூங்கும் நேரம் கொஞ்சமாக இருந்தாலும் அந்த தூக்கம் ஆழ்ந்த தூக்கமாக இருக்கும். மாவீரன் நெப்போலியன் 3 முதல் 4 மணி நேரம்தான் தினமும் தூங்குவாராம். பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சுமார் 10 மணி நேரம் தூங்குவாராம். `நல்ல பொழுதையெல்லம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’ என்று சினிமாப் பாடல் உண்டு.

அப்படி தூங்கக்கூடாத நேரத்தில் தூங்கியும், தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமலும் இருந்து உடம்பைக் கெடுத்துக் கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆதிகாலத்தில் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தார்கள். அதே குகைகளில் பயங்கர மிருகங்களும் வாழ்ந்தன. இருட்டானவுடன் அந்த மிருகங்களின் பயங்கர உருவங்களையும், அலறல்களையும், சத்தங்களையும் மனிதர்கள் பார்த்து, கேட்டு பயந்து பயந்தே இரவைக் கழித்தார்கள். பகலில் மிருகங்கள் தெரியும்.

இரவில் மிருகங்கள் தெரியாது. எனவே இரவு வந்து விட்டாலே ஆதிவாசிகளுக்கு பயமும் கூடவே வந்து விடும். மனிதன் குகைகளில் வாழ்ந்த காலம், நெருப்பைக் கண்டுபிடிப்பதற்கு முன்புள்ள காலம் என்பதால், அப்போது நெருப்பை பயன்படுத்தி வெளிச்சம் உருவாக்க மனிதர்களுக்குத் தெரியாது. அதனால் இருட்டில் என்ன செய்வதென்றே தெரியாது.

எனவே வேறு வழியில்லாமலும், பகலில் இரைக்காக அலைந்ததனால் ஏற்பட்ட அசதியில் சோர்வு ஏற்பட்டிருப்பதாலும் குகையில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து உடல் களைப்பில் தானாகவே தூங்க ஆரம்பித்து, பின்னர் அதையே தினமும் இருட்டியவுடன் செய்ய ஆரம்பித்து, இதுவே பின்னாளில் இரவு என்றால் தூக்கத்திற்குத்தான் என்று பழக்கமாகி விட்டது.

Loading...

Post a Comment

111